தமிழக எல்லைக்குள் இருக்கும் ஒகேனக்கல்லில் இருந்து குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்குக்கூட தடை செய்யும், கர்நாடக அரசின் வம்பிற்கிழுக்கும் மனித நேயமற்ற, இந்திய ஒருமைப்பாட்டை மதிக்காத போக்கை என்னவென்று சொல்வது? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கங்கையை தேசிய நதி என்று அறிவித்துள்ளோம். அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்க வேண்டும். நதிகளை தேசியமயமாக்கி இணைப்பதுதான் இந்தியா வல்லரசாகவும், நல்லரசாகவும் உருவாக வழி வகுக்கும்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்ன நியாயம்?
மொழி வழி மாநில எல்லை வகுக்கும்போதே இப்போது ஒகேனக்கல் அருவி இருக்கும் இடத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அச்சுப்பாறை வரை தமிழகம் என்று அளவிட்டிருக்கிறோம். அப்படியிருக்க இப்போது மறு அளவை செய்ய வேண்டும் என்று எடியூரப்பா சொல்வது என்ன நியாயம்?
தமிழகத்தில் இருந்த மாதேஸ்வரன் மலை, பட்டுக்குப் பெயர் பெற்ற கொள்ளேகால், சாம்ராஜ் நகர், கோலார் தங்க வயல், அத்தப்பள்ளி ஆகியவை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு கொடுக்கப்பட்டவைதானே. உண்மை இதுவாயிருக்க தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கும் ஒகேனக்கல்லில் இருந்து குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்குக்கூட தடை செய்யும், கர்நாடக அரசின் வம்பிற்கிழுக்கும் மனித நேயமற்ற, இந்திய ஒருமைப்பாட்டை மதிக்காத போக்கை என்னவென்று சொல்வது?
இமயத்தில் இருந்து குமரி வரை ஓடும் நதிகளை தேசியமயமாக்கி ஒன்றோடொன்று இணைப்பதுதான் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்டி இந்திய மக்களுக்கு வளம் தரும் திட்டமாக அமையும்" என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.