கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு ரயில்வேயில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது
தினமும் 10 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
எவ்வளவுதான் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் சில வழித்தடங்களில் ரயில் சேவையை மேலும் அதிகரிக்குமாறு பயணிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு புதிதாக 100 பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே 28 சேவைகளும், எழும்பூர்-நெல்லை மற்றும் சென்டிரல்-கொல்லம் இடையே தலா 8 சேவைகளும், சென்டிரல்-பெங்களூர் மற்றும் எழும்பூர்-திருச்சி இடையே தலா 9 சேவைகளும், எழும்பூர்-தூத்துக்குடி மற்றும் கோவை-திருப்பதி இடையே தலா 10 ரயில் சேவைகளும் கூடுதலாக இயக்கப்படும்.
இதேபோல், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்னை-பெங்களூர் இடையே விமான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் அங்கும் ரயில்வே சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதலாக 372 ரயில்வே சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, திருச்சி-மதுரை, கோவை-ஈரோடு, நெல்லை-திருச்செந்தூர், அரக்கோணம்-தாம்பரம், திருச்சூர்-குருவாயூர், கொல்லம்-திருவனந்தபுரம் இடையே தலா 62 சேவைகள் இயக்கப்படும்.
பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும் கோவை-திருப்பதி இடையேயும் கூடுதல் ரயில் சேவை இயக்கப்படும். அதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும். பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து இந்த சேவைகள் தினசரி சேவையாக மாற்றப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.