இலங்கை அரசு இந்தியாவிடம் ஒன்று சொல்லுகிறது, உலக நாடுகளிடம் பேசும் போது வேறுவிதமாக பேசுகிறார்கள் என்று தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இலங்கை தமிழர்களுக்கு தீர்வு காண போர் நிறுத்தம் மட்டும்தான் வழி என்றார்.
சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வாழ்த்தி பேசுகையில், சிங்கள மொழி என்று இலங்கையின் ஆட்சி மொழியாக மாற்றப்பட்டதோ, புத்த மதம்தான் அந்த நாட்டின் மதமாக சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோ அன்றே தமிழர்களின் போராட்டமும் தொடங்கியது என்றார்.
1957ஆம் ஆண்டு செல்வாவுக்கும், இலங்கையை ஆட்சி செய்துகொண்டிருந்த பண்டாரநாயக்காவுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி தமிழர்களுக்கு உரிமைகள் திருப்பிதரப்படும் என்றும் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக அந்த நாட்டில் சமக்குடிகளாக கருதப்படுவார்கள் என்ற உறுதி மொழி கொடுக்கப்பட்டது என்று தெரிவித்த கனிமொழி, இந்த ஒப்பந்தம் முதல் இலங்கை அரசு இதுவரை இயற்றிய எந்த ஒப்பந்தத்திற்கும் ஒரு காகிதத்தின் மதிப்பை கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை என்று கூறினார்.
உலகத்தில் எந்த இடத்தில் போர் நடந்தாலும் உலக சமாதான நிறுவனங்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படும். செஞ்சிலுவை சங்கம் மூலமாக அங்கு உள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்படும். ஆனால் இலங்கையில் மட்டும் செஞ்சிலுவை சங்கத்தை தூரத்திவிட்டார்கள். ஐ.நா. சபையை சேர்ந்த அமைப்புகள் எல்லாம் விரட்டப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார் கனிமொழி.
இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை எப்படி நடத்துகிறது என்ற உண்மை நிலை நமக்கு தெரிவது இல்லை என்று குறிப்பிட்ட கனிமொழி, முகாமில் இருக்கும் தமிழர்களை விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்களா என்று கேட்டு சித்ரவதை செய்கிறார்கள். முகாமில் இருக்கும் தமிழர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரிவது இல்லை. இவ்வாறு மனித உரிமைகள் மீறப்படுகிறது என்றார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்த போர் முடிந்த பிறகு தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க செய்துவிடுவேன் என்று கூறுகிறார். இலங்கை அரசு இந்தியாவிடம் ஒன்று சொல்லுகிறது. உலக நாடுகளிடம் பேசும் போது வேறுவிதமாக பேசுகிறார்கள். ஆகவே எது உண்மை என்பதை நாம் கேட்க வேண்டாமா? இலங்கை தமிழர்களுக்கு தீர்வு காண போர் நிறுத்தம் மட்டும்தான் வழி என்று கனிமொழி கூறினார்.
இப்படி தன்னிடம் ஆயிரம் குறைபாடுகளை வைத்துக்கொண்டு இருக்கும் இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்போதுதான் இந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் நமது கடமை. இந்திய அரசு தன்னால் முடிந்த அத்தனை வழிகளிலும் போர் நிறுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். முடிந்தால் உலக நாடுகளோடு பேச வேண்டும் என்று கனிமொழி கேட்டுக் கொண்டார்.