இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள மறுத்து வருவதால், மன வேதனையடைந்த முதலமைச்சர் கருணாநிதி தமது பதவியை ராஜினாமா செய்ததாக தலைமைச் செயலகத்தில் பரவலான தகவல் வெளியானது.
இதையடுத்து மூத்த அமைச்சர்கள் கோட்டைக்கு விரைந்து சென்று, முதவரை சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரிகிறது.
இலங்கையில் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றுதான் முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதுவரை அது சாத்தியப்படவில்லை. இதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் சுட்டிக்காட்டியது முதல்வரின் மனதை வெகுவாக பாதித்ததாக தெரிகிறது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்ததால், அதனை கண்துடைப்பு நாடகம் என்று பிற கட்சித் தலைவர்கள் குறைகூறியதும் அவருக்கு வேதனையை ஏற்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் கருணாநிதி ராஜிநாமா செய்ய முடிவெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.