பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது ஏன்? என்ற கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்கு ஒளிவுமறைவு இன்றி விளக்கம் அளிப்பாரா? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பங்குச் சந்தையை தாங்கிப் பிடிப்பதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், அதாவது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மிகப்பெரிய நிதியை மத்திய அரசாங்கம் பங்குச் சந்தையில் புழக்கத்தில் விட்டிருப்பதாக தற்போது பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
இவ்வளவு செய்தும், பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது ஏன்? எந்தப் பணம் சந்தைக்குள் வருகிறது? அந்தப் பணம் எங்கே போகிறது? என்னதான் நடக்கிறது.
அயல்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து, கடந்த சில மாதங்களில் மட்டும் 25 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சர்வதேச அளவில் 50 விழுக்காடு அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தும், அந்தப் பயனை உள்நாட்டு நுகர்வோர்களுக்கு மைய அரசாங்கத்தால் தர முடியவில்லை. இதுதான் ப.சிதம்பரத்தின் பொருளாதார மேலாண்மை.
பாரத ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அபரிமிதமான பணப் புழக்கத்தில், மத்திய நிதி அமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் வலுவான நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு கழகம், பொதுக் காப்பீட்டுக் கழகம் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளும் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படித்தான் பணப்புழக்கம் இது போன்ற வழியில் பங்குச் சந்தைக்கும், பங்குச் சந்தையில் இருந்து அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கும் செல்கிறது. பணத்தை இழந்த ஒரு சிலருக்கு இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என்பதற்காகவே, ஏன் இந்த நிறுவனங்களின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும்? யார் அந்தப் பயனாளிகள்?
இத்தகைய கேள்விகள் நிறைய உள்ளன. பெரிய பொருளாதார மேதை என்று சொல்லக்கூடிய பாரதப் பிரதமரும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த நிதியமைச்சர் ப.சிதம்பரமும் நாட்டு மக்களுக்கு ஒளிவு மறைவு இன்றி இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார்களா? என்று ஜெயலலிதா கேட்டுள்ளார்.