''நாங்கள் பேச்சை நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் போரை நிறுத்துங்கள்'' என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறினார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னை சாலிகிராமத்தில் தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு இயக்குனர் பாரதிராஜா பேசியது:
உலகத்திற்கு தமிழ் இருப்பதை, ஏன் தமிழை கொண்டு சென்றவன் இலங்கைத் தமிழன்தான். தமிழன் என்ற இனம் இருப்பதை உலகிற்கு பறைசாற்றுகின்றவன் தமிழன்தான். அத்தகைய தமிழனை நீ குண்டுபோட்டு அழிக்கிறாய். ரொம்ப அழகாகச் சொன்னார்கள், அவர்கள் யுத்தத்தில் மிகப்பெரிய புத்திசாலிகள் அல்ல. மிகவும் வலுமான அரசு அல்ல, இலங்கை வல்லரசும் அல்ல.
உனக்கு எப்படி இவ்வளவு பவர் வந்தது. ராடார் மூலமாக கண்டுபிடிப்பதற்கும் கடல் வழியாக செல்லுகின்ற சில சில ராய்மாய்களை அங்கிருந்து சுட்டுக் பொசுக்குவதற்கும் இடம் கண்டுபிடிப்பதற்கும் நீ (மத்திய அரசு) இங்கிருந்து தொழில்நுட்ப கருவிகளை அனுப்பி இருக்கிறாய். இந்தியாவால் கடந்த 4 மாதங்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுதான் இதற்கு முதற்காரணம், சந்தேகமே கிடையாது. அவனுக்கு காரியம் முடிகிறது.
முக்கால்வாசி தமிழனை அழித்து விட்டான். பாக்கியை அழித்து விடுவான். இன்னும் 6 எம்.பி இருக்கான். அவனையும் தீர்த்துக் கட்டுவான் பார்த்துக் கிட்டே இருங்க. தீத்து கட்டிட்டு மிச்சம் இருக்கிற தமிழனை அழிச்சிட்டானா ஒரு புல்பூண்டில்லை தமிழன். அவனை அடையாளம் இல்லாமல் அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். இது உங்களுக்கு புரியவில்லை.
நாம இங்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிக்கொண்டே இருக்கிறோம். நான் ஒன்றை மட்டும் ரொம்ப தெளிவாக செல்கிறேன், நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தாமதப்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்கு பிணம் குவிந்து கொண்டு இருக்கும். நீங்கள் நாளை தள்ளத்தள்ள இந்த இனம் அழிந்து கொண்டுதான் இருக்கும்.
புத்திசாலித்தனமாக, தயவு செய்து கையெடுத்து குப்பிட்டுக் கேட்டுக் கொள்கிறோம், போரை நிறுத்து என்று சொல்கிற அளவுக்கு உனக்கு வலிமை இருக்கிறது. வல்லரசுக்கான சக்தி இருக்கிறது. ஏன் அதை செய்யவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி. நாங்கள் அரசியல் வாதிகள் அல்ல, சமூக பொறுப்பு உள்ளவர்கள். இவன் சராசரி சிட்டிசன். எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர்கள். எங்களுக்கு ரசிகர்கள் கிடையாது, கட்சி கிடையாது, கலைஞர்கள் சமூக பொறுப்புள்ள கலைஞர்கள். இனமானம் உள்ள கலைஞன். ஆகையினால் கேட்கிறோம், எங்கள் இனம் அழிகிறது, தயது செய்து கையெடுத்து கும்பிடுகிறோம், போரை நிறுத்த நினைத்தால் இந்த நேரத்தில் நிறுத்த முடியும். நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு செல். செத்து தினம் தினம் பிணமாய் கிடக்கும் எங்கள் இனங்களை காப்பாற்றுங்கள் என்றுதான் உங்களை கையெடுத்து கும்பிடுகிறோம்.
பள்ளிக்கு செல்லுகிற பிள்ளைகள் எல்லாம் பதுங்கி குழியில் கிடக்கிறார்கள். நீங்கள் படங்களை பாருங்கள். சட்டி பானைகளை தூக்கிக் கொண்டு எங்கே செல்வது என்று தெரியவில்லை. மேலே சத்தம் கேட்டால் பிள்ளைகளுக்கு சொல்லத் தெரியவில்லை, வண்டிச் சத்தம் கேட்கிறது என்று கூறுகிறார்கள்.
தரைப்படை, கடல்படை, வானூர்தி மூன்று வழிகளிலும் எங்களை அழித்துக் கொண்டிருக்கிறாய். கொஞ்சம் விட்டால் கதைவேற. பேசக் கூடாது.. சரி வேண்டாம்... நாங்கள் அதை பேச முடியாது. இறையாண்மையைச் சொல்லி தமிழ்நாட்டையா பிரித்துக் கொடுக்க சொன்னோம். இந்த நாட்டை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு முறையீடுவதற்குகூட எங்களுக்கு உரிமையில்லையா, புரியவில்லை.
தடை செய்யப்பட இயக்கம், தடை செய்யப்பட்ட இயக்கத்தை எவ்வளவு தூரம் விமர்சிக்கின்றீர்களோ அவ்வளவு தூரத்துக்கு பேச உரிமை இருக்கிறது அல்லவா? தடை செய்யப்பட்ட இயக்கத்தை விமர்சிப்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு தூரத்துக்கு வாதாட உரிமை இல்லையா?
நீங்கள் தயது செய்து போரை நிறுத்துங்கள். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. இவன் ரொம்ப பேசுறான் என்று போடுவீங்க. எத்தனை பேரை போடுவீங்க.. ராமேஸ்வரத்தில் இரண்டு பேரை போட்டு இருக்கிறீர்கள். 2,500 பேரையும் போட்டு இருக்கனும், கைத் தட்டிய 2 லட்சம் பேரையும் போட்டு இருக்கனும்.
ஏன்னா நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. இந்த நாட்டின் குடிமகன். உரிமைகளையும், உணர்வுகளையும் பதிவு செய்கிறோம், அவ்வளவுதான். நாங்கள் பிரிவினைவாதம் பற்றி பேசவில்லையே.
எல்லோரும் பேசிட்டாங்க.. மகாராஷ்டிராவில் இனவெறி இல்லை, இன ஒற்றுமை அதிகமாக இருக்கிறது. பீகாரில் இருந்து வந்த ஒருவனை சுட்டுக் கொன்னுட்டாங்க. அங்கு லல்லு பிரசாத், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவங்க. ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டுட்டாங்க. ஆக அந்த ஒற்றுமை இந்த தமிழகத்தில் இல்லையே. அரசியல் வேறுபாடுகளை மறந்து இனத்தை காப்பாற்றுவது ஒன்றுதான். இன உணர்வின் அடிப்படையில் இயலாமல் படுத்திருந்த நிலையிலும் இதில் நான் கலந்து கொள்வேன் என்று கூறி இங்கு வந்திருக்கிறார் எங்கள் இமயம் (பாலச்சந்தர்).
பற்றி எரிகிறது உணர்வு, ஆகையினால் பொறுப்புள்ளவர்களே, முக்கியஸ்தர்களே நாங்கள் இங்கிருந்து கேட்கிறோம். உடனடியாக போரை நிறுத்து. வங்கதேசத்தை பிரித்துக் கொடுத்தீர்கள். ஈராக்கில் அமெரிக்கா குண்டு போட்ட போது அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் நினைத்தால் ராஜபக்சேவிடம் போரை நிறுத்த என்று சொல்ல முடியாதா?
மத்திய அரசே மத்திய அரசே தயது செய்து உடனடியாக போரை நிறுத்த வழி செய்யுங்கள். ஒரு அமைதிக்குழுவை அனுப்புங்கள். அங்கே பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
தினம் தினம் ஆயிரக்கணக்கான தமிழினம் அழிந்து கொண்டிருகிறது. விடுதலைப்புலி செத்தாக்கூட பரவாயில்லை. சாதாரண தமிழன், தமிழச்சி செத்துக் கொண்டிருக்கிறான். வறுமையில் செத்தாக்கூட பரவாயில்லை. குண்டடிப்பட்டு சொத்துக் கொண்டிருக்கிறான். போரை நிறுத்தும்போது அங்கு சுடுகாட்டைதான் காட்டப்போறான்.
உணர்ச்சி வேகத்தில் கலைஞர்கள் பேசுகிறார்கள், அதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் பேச்சை நிறுத்த வேண்டும் என்றால் நீ போரை நிறுத்து என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி!
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.