மதுரை மாவட்டடம் இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை வன்மையாக கண்டிப்பதாகவும், இப்பகுதியில் பதற்றத்தை தணிக்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம் உத்தபுரத்துக்கு 2ஆம் தேதி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்று திரும்பினார். எழுமலை என்ற கிராமத்தில் வரும்போது கிருஷ்ணசாமி ஆதரவாளர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதை கண்டிப்பதற்காக எழுமலைக்கு அருகில் உள்ள இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சார்ந்தவர்கள் 4ஆம் தேதி காலை சாலை மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர்.
அவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுரேஷ் என்ற தலித் இளைஞர் இறந்துள்ளார். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். காவல் துறையினரின் அத்துமீறல் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. இப்பகுதியில் பதற்றத்தை தணிக்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்று வரதராஜன் கூறியுள்ளார்.