புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதலைக் கண்டித்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.
இதில் பேருந்தின் இருக்கைகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
என்றாலும் பேருந்தின் 9 இருக்கைகள் எரிந்து சாம்பலானதாகவும், பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கியதாக்வும், தீவைத்த கும்பல் தப்பியோடி விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
பேருந்தில் பயணிகள் இல்லாததால், உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை குரு தியேட்டர் அருகே கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்து மீது மற்றொரு கும்பல் கல்வீசி தாக்கியது.
இதில் பேருந்தின் முன்புற கண்ணாடிகளும் பின்பக்க கண்ணாடிகளும் நொறுங்கின. இதேபோல இன்னொரு அரசு பேருந்தின் மீதும் கற்கள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.