உசிலம்பட்டி அருகே வன்முறையாளர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் உசிலம்பட்டி பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுமலை என்ற கிராமத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உசிலம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டி என்ற இடத்தில் இன்று இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினரை தடுப்பதற்காக புதிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தபுரம் அருகே உள்ள கோட்டைப்பட்டியில் கற்களையும், மரங்களையும் சாலையின் குறுக்கே போட்டனர். அதனை அப்புறப்படுத்த முயன்ற காவல்துறையினர் மீது வன்முறை கும்பல் சரமாரியாக கற்களை வீசியது. இதில் சில காவல்துறையினர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறையினர் முதலில் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசினர். அப்படியும் கூட்டத்தினர் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் (25) என்பவர் படுகாயமடைந்தார். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த அவர்களை உடனடியாக மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மற்ற இரண்டு பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, எழுமலை என்ற இடத்தில் இருபிரிவினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. நாட்டு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் உசிலம்பட்டி பகுதிக்கு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.