கோபிசெட்டிபாளையம் அருகே 150 பவுன் நகை கொள்ளை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவரை கத்தியை காட்டி மிரட்டி 150 பவுன் தங்கநகை கொள்ளையடித்து சென்ற முகமூடிகொள்ளையரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது நம்பியூர். இங்கு வசிப்பவர் மருத்துவர் தனசேகரன். நேற்று இரவு இவர் தன்வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வீட்டின் பின்புறகதவை இரும்புகம்பியால் உடைத்து ஆறு பேர் வீட்டிற்குள் புகுந்தனர்.
ஆறுபேரும் முகமூடி அணிந்திருந்தனர். உடனே மருத்துவர் தனசேகரன் எழுந்து நீங்கள் யார், என்ன வேண்டும் என கூறி சத்தமிட முயன்றார். அப்போது அவரை சுற்றிலும் கத்தி மற்றும் தடிகளுடன் ஆட்கள் சுற்றிவளைத்தனர். பின் மிரட்டி பீரோ சாவியை வாங்கினர்.
பின்னர் பீரோவில் இருந்த 150 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ.65 ஆயிரத்தையும் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் தப்பியோடியது.
இந்த சம்பவம் குறித்து கோவை காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி.) சிவனான்டி, ஈரோடு மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி) அவினாஷ்குமார், சுந்தரராஜன் உள்ளிட்டோர் விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து மர்மமனிதர்களை தேடி வருகின்றனர்.
திருட்டுபோன நகையின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.