ஜவஹர்லால் நேரு மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை மதுரவாயல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் திட்டத்திற்காக ரூ.57.455 கோடியை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதில் ரூ.20.11 கோடி மத்திய அரசின் பங்களிப்பாக இருக்கும்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்புக் குழு சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அளித்து வருகிறது. அண்மையில் மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின் செயலர் டாக்டர் எம். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னையில் உள்ள மதுரவாயல் நகராட்சிக்கு கழிவு நீர் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரவாயல் நகராட்சி பகுதியில் கழிவு நீர் வெளியேறுவதற்கான சரியான வழிமுறைகள் இல்லை. இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 4.78 சதுர கி.மீ. பகுதியில் 44,000 பொது மக்கள் பயன்பெறுவார்கள். தற்போது நகரில் 5 மண்டலங்கள் உள்ளன.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு கழிவுநீரேற்று மையமும், கழிவுநீர் சேகரிப்பு நிலையமும் அமைக்கப்படும். இந்த 5 கழிவுநீரேற்று நிலையங்கள் மூலம் 94.64 கிமீ பரப்பளவில் உள்ள பகுதிகள் பயன்பெறும். மேலும் 165.52 கி.மீ. குடியிருப்பு பகுதி சாக்கடையும் அடங்கும்.
இந்த திட்டத்தில் அந்தந்த பகுதிக்கு ஏற்ப ஒருமுறை இணைப்பு கட்டணமாக ரூ.3,000 முதல் ரூ.25,000 வரை வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இதிலிருந்து 300 சதுர அடிக்கும் குறைவாக உள்ள இடத்தில் வசிக்கும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாதம் வரியாக ரூ.75 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும். இதிலும் 300 சதுர அடிக்கும் குறைவாக உள்ள இடத்தில் வசிக்கும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட ஆலந்தூர் மாதிரி திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். நகர்ப்புற ஏழைகளுக்கு 100 விழுக்காடு சுகாதார வசதி ஏற்படுத்தி தரும் தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.