Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற்றது!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற்றது!
, செவ்வாய், 4 நவம்பர் 2008 (00:49 IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.

கடந்த 29ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. ஆறாம் திருவிழாவான நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சேர்ந்து, அங்கு பக்தர்களுக்கு காட்சி அருளி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாலை 5.15 மணியளவில் முருகப்பெருமான், முதலில் யானை முக சூரனையும், பின்னர் சிங்க முக சூரனையும் வதம் செய்தார். பின்னர், தனது உண்மை சொரூபம் எடுத்த பத்மாசூரனை வதம் செய்தார். இறுதியில் சூரபத்மனை வேலாகவும், மயிலாகவும் தன்னுடன் சுவாமி ஆட்கொண்டார்.

தொடர்ந்து கடற்கரை சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் சுவாமியும் அம்பாளும் அலங்கார சப்பரத்தில் கிரிவீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தனர்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து, பானகம் அருந்தி, தாங்கள் மேற்கொண்ட சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் வெ. ராதிகா செல்வி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், அறநிலையத் துறை ஆணையர் த.பிச்சாண்டி உள்பட பலர் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

கந்த சஷ்டி திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியாக செவ்வாயன்று இரவு திருக்கல்யாண மண்டபத்தில் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பழனியில், கந்தசஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil