ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கைதைக் கண்டித்து அக்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ம.தி.மு.க. வட சென்னை மாவட்ட செயலர் ஜீவன் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்து காவல்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதி சுகுணா தீர்ப்பளித்தார்.
மனுதாரர் அனுமதிக் கேட்டு 5 நாட்களுக்குள் புதிதாக மனு ஒன்றை காவல்துறை ஆணையரிடம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் காவல்துறை ஆணையர் அந்த மனுவை பரிசீலித்து தேவையான உத்தரவுகளை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவித்ததாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, கண்ணப்பன் ஆகியோர் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்டோபர் 30ஆம் தேதி கண்டன பொதுக் கூட்டம் நடத்த அக்கட்சி முடிவு செய்தது.
சென்னை மின்ட் பகுதியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கேட்டு கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஜீவன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை காவல்துறை 29ஆம் தேதி நிராகரித்தது.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜீவன் தாக்கல் செய்த மனுவில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக் கேட்டு தான் தாக்கல் செய்த மனு மீது தனது நிலை என்ன என்று விளக்கம் அளிக்ககூட எந்தவித சந்தர்ப்பமும் அளிக்காமல் மனுவை தள்ளுபடி செய்ததாக கூறியிருந்தார்.
மேலும், ம.தி.மு.க. வினர் ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதியளிக்கக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அவர் அந்த மனுவில் குற்றம் சாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, கண்டன பொதுக்கூட்டம் நடத்த ம.தி.மு.க.வுக்கு அனுமதியளிக்குமாறு காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.