உத்தப்புரம் பிரச்சனையை விரைவில் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், உத்தப்புரம் கிராமத்தில் எழுப்பப்பட்ட சுவரால் கடந்த 6 மாதகாலமாக இரு தரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது என்றும் இதனால் அங்கு பதற்றம் நிறைந்து காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதனால் இப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைப்பதற்காக அப்பகுதி மக்களுடன் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்து விட்டு எழுமலை கிராமம் வழியாக மதுரை நோக்கி திரும்பி கொண்டிருந்ததாகவும் அப்போது மர்ம கும்பல் ஒன்று வழி மறித்து தன் மீதும் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.
போதிய பாதுகாப்பின்மை காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உத்தப்புரம் பிரச்சனையை விரைவில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் தாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
தலைவர்களின் சிலையால் பிரச்சனைகள் எழுப்ப முயன்றால் தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளை அகற்ற போராட வேண்டியது வரும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.