இலங்கைத் தமிழரைப் பாதுகாத்திட உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிங்கள இனவெறியர்கள் நடத்தும் தமிழினப் படுகொலையைத் தடுத்திட, இந்தியப் பேரரசு உடனடியாகத் தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒட்டு மொத்த தமிழகமே உரத்து முழங்கி வரும் நிலையிலும் அதற்கான முன் முயற்சிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை. வழக்கம் போல இந்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது.
இந்நிலையில் எதிர் வரும் நவம்பர் 10 அன்று கூடவிருக்கிற தமிழக சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழரைப் பாதுகாத்திட உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென முதல்வர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
செம்மொழி தமிழைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றையும் செம்மொழிகளாக இந்திய அரசு அறிவித்துள்ளது. தமிழுக்கு மட்டும் அத்தகு சிறப்பு அமைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் சில நூறு ஆண்டுகள் பாரம்பரியமுள்ள அம்மொழிகளை, ஆதிமூலத்தை அறியமுடியாத அளவுக்கு மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ்மொழியுடன் இணைப்படுத்தும் இம்முயற்சியில், காழ்ப்புணர்வு அடங்கிய உள்நோக்கமிருப்பதைக் காண முடிகிறது.
விசாரணையில் இருக்கும்போதே வீம்புக்கென செய்திருப்பதை அறிய முடிகிறது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாகனமும் அவருடன் சென்ற சில வாகனங்களும் உசிலம்பட்டி அருகே தாக்கப்பட்டிருப்பதும், சென்னையில் செங்கை சிவத்தின் வீடு தாக்கப்பட்டிருப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியதாகும். இவை தொடர்பாக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.