அரசியலுக்கு வருவது பற்றி ஆண்டவன்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தம் கையில் எதுவும் இல்லை என்றும் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்த அவர் ரசிகர்களின் முன்பு பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அதற்காக தாங்களே தனியாக ஒரு கட்சியை உருவாக்கி கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு தனது அனுமதியில்லாமல் யாரும் கட்சி தொடங்கக்கூடாது என்று ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று ரஜினிகாந்தை சந்திப்பதற்காக காலை 7 மணியிலிருந்தே அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் முன்பு குவிந்தனர். மாவட்டத்துக்கு 7 நிர்வாகிகள் வீதம் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் ரசிகர்களிடையே பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அரசியலில் வெற்றி பெறுவதற்கு அவரவர் திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு ஆகியவைதான் காரணம் என்றால் அது முட்டாள் தனம் என்று கூறினார்.
அரசியலில் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் முக்கியம் என்று கூறிய அவர் நல்ல சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் அரசியலில் வெற்றி பெற முடியும் என்றார்.
அவ்வாறு, இல்லையென்றால் குட்டிக்கரணம் அடித்தாலும் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று கூறிய அவர், தான் அரசியலுக்கு வருவதென்றால் 1996ஆம் ஆண்டே வந்து இருக்கலாம் என்றும் எதையும் ஆழமாக சிந்திக்காமல் இறங்க மாட்டேன் என்றும் கூறினார்.
சினிமாவில் வர விரும்பிய போது கூட பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து விட்டுத்தான் வந்ததாக கூறிய அவர் அது போல் எந்தவித அனுபவமும் இல்லாமல் எதிலும் இறங்க மாட்டேன் என்றார்.
மேலும், அரசியலுக்கு வருவது பற்றி ஆண்டவன்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தம் கையில் எதுவும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் தன்னைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அந்த உத்தரவு கடவுளிடம் இருந்து வரவேண்டும் என்றும் கூறிய அவர் அவ்வாறு கடவுள் உத்தரவு தந்துவிட்டால் தான் அரசியலுக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
.
தான் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துக்கொள்ள செய்வது போன்றது என்று கூறிய அவர் அவ்வாறு ஒருவர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டால் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த முடியாது என்றும் தன்னை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழப்பதும் இதைப் போன்றதுதான் என்றும் கூறினார்.