தேனி மாவட்டம் எழுமலை கிராமத்தில் நேற்றிரவு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் வாகனம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் தொண்டர்கள் இன்று பேருந்து எரிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர், கோயம்பேட்டில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட அரசு பேருந்தை வழி மறித்து சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பின்னர் பெட்ரோல் ஊற்றி பேருந்தை தீவைத்துக் கொளுத்தினர். இதில் பேருந்தின இருக்கைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். பின்னர் அந்த வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதேபோல் திருச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஐயப்பன் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் மத்திய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அவர்கள் கிருஷ்ணசாமியின் வாகனம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெவித்ததோடு இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தியதோடு கிருஷ்ணசாமிக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சோளச்சேரி என்ற இடத்துக்கு அருகே வந்து கொண்டிருந்த போது சிலர் பேருந்தை வழி மறித்து பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பேருந்துக்கு தீ வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.