அரிதாரம் பூசிய பலர் தமிழக முதல்வராக இருந்துள்ளனர் என்று நடிகர் ராதா ரவி கூறியுள்ளர்.
அரிதாரம் பூசியவர்களைப் பற்றி இராமேஸ்வரம் பேரணியில் பேசிய சிலர் குறை கூறியதாகவும், அரிதாரம் பூசியவர்களுக்கு அரசியல் தெரியாதா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரைப்படத்துறையினர் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை முதல்கட்ட போராட்டமாகவே தாங்கள் கருதுவதாகவும், மனிதச் சங்கிலி அணிவகுப்பை 2ஆவது கட்ட போராட்டமாகவும், தற்போது நடைபெறும் உண்ணாவிரதத்தை 3-ஆவது கட்ட போராட்டமாகவும் தாங்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்றவர்கள் தலைமையில், நாங்கள் இரண்டாம்பட்சமாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதற்காகவே இராமேஸ்வரத்திற்குச் செல்லவில்லை, தற்போது நடைபெறுவது நடிகர்களாகிய எங்கள் தலைமையில் நடைபெறும் போராட்டம் என்றும் அவர் கூறினார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் - பெப்சி சார்பில் வரும் 5ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்துள்ள போராட்டம், இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக நடைபெறும் அடுத்தகட்ட போராட்டம் என்றும் ராதாரவி கூறினார்.
அரிதாரம் பூசிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்துள்ளார். தற்போதைய முதல்வராக உள்ளவரும் (கருணாநிதி) அரிதாரம் பூசியவர்தான். அரிதாரம் பூசிய தனது தந்தை எம்.ஆர். ராதா, திராவிடர் கழகத்தை வளர்த்தவர் என்றும் ராதா ரவி கூறினார்.