Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை தாக்குதலை உலக நாடுகள் எதிர்க்க வேண்டும் : கமல்!

இலங்கை தாக்குதலை உலக நாடுகள் எதிர்க்க வேண்டும் : கமல்!
, சனி, 1 நவம்பர் 2008 (16:28 IST)
இலங்கைப் பிரச்சினை என்பது ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கும் பிரச்சினையல்ல. இது உலக அளவிலான பிரச்சினை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும் சென்னையில் தென்னிந்தியதிரைப்பட நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் பேசிய அவர், இந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டுப் பிரச்சினை என்ற ரீதியில் பார்ப்பதை விட உலகப் பிரச்சினை என்று சொன்னால் மிகையல்ல என்றார்.

எங்கெல்லாம் இனப்படுகொலை நடைபெறுகிறதோ, அதனை உலகநாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

இங்கே உணர்ச்சிகளைக் கொட்டக்கூடாது, உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

சில நேரங்களில் உணர்ச்சி மேலிடுகையில், சிலவற்றைப் பேச நேரிடும். உள்ளதைச் சொன்னாலே கோபித்துக் கொள்ளக்கூடிய இன்றைய கால கட்டத்தில் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் சொன்னால் என்னவாகும்? என்பதை சொல்லத் தேவையில்லை.

உணர்ச்சிகளைக் கொட்டிய நமது இரு இயக்குனர்கள் முட்கிரீடத்துடன் சிறை சென்று, மலர்க்கிரீடத்துடன் வெளியே வந்துள்ளனர்.

இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை அங்குள்ள தமிழர்கள் சம உரிமை கேட்கிறார்கள். சம உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், தீவிரவாதம் உருவாகிறது. பிரச்சினை தீர்ந்து உரிமைகள் வழங்கப்பட்ட பின் தீவிரவாதிகள் தியாகியாகி விடுகிறார்கள். வாஞ்சிநாதனுக்கு நாம் சிலை வைக்கவில்லையா?

இலங்கை தமிழர்கள் அவர்கள் சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக நேரிடுகிறது. நாம் அவர்களுக்கு புகலிடம் அளித்த போதிலும், தமிழர்கள் என்பதால் அவர்களுக்கும் தன்மானம் இருக்கும்.

எனவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, மத்திய அரசையும், நம்முடைய அரசையும் நாம் வலியுறுத்திய போதிலும், எங்கெல்லாம் இனப்படுகொலை நடக்கிறதோ, அதனை உலக நாடுகள் கண்டிக்க முன்வர வேண்டும்.

ஹிட்லர் காலத்தில் ஏற்பட்ட போர் உலகப் போராக முடிந்தது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று கமல்ஹாசன் பேசினார்.

நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை தாம் வழங்குவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil