Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு போர் நிறுத்தமே: சத்யராஜ்!

இலங்கைப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு போர் நிறுத்தமே: சத்யராஜ்!
, சனி, 1 நவம்பர் 2008 (16:24 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சனைக்கு உடனடித் தீர்வு போர் நிறுத்தமே என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற சத்யராஜ் பேசியதாவது:

இப்போராட்டத்திற்கு சீமான், அமீர் தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்தாமல், சிறப்பாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மன்சூர் அலிகான் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசையோ, மத்திய அரசையோ விமர்சித்துப் பேசக் கூடாது என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே எனது உணர்வுகளை அடக்கிக் கொண்டுள்ளேன்.

சிங்கள அரசுக்கு எதிராக நாம் ஏன் பேச வேண்டும். தேவையில்லை. சிங்கள ராணுவத்தினர் தமிழர்களுக்கு என்ன கேடு அல்லது அநீதி செய்தார்கள். அவர்களைப் பற்றி நாம் விமர்சித்துப் பேசு வேண்டும். இலங்கையில் இறந்த தமிழர்கள் அனைவரும் சர்க்கரை நோய், இருதயக் கோளாறு காரணமாக இறந்தவர்கள். எனவே சிங்கள ராணுவத்தினர், இன வெறியர்கள் தமிழர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. சிங்கள ராணுவத்தினர் அன்பு உள்ளம் கொண்டவர்கள்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மேல் அவர்கள் குண்டு வீசவில்லை. செஞ்சோலையில் அவர்கள் குண்டு வீசியது கூட அங்கு விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாக நினைத்துதான்.
எனவே அவர்கள் மீது வெறுப்பு கொள்ளக் கூடாது என்று வஞ்சிப்புகழ்ச்சி முறையில் சிங்கள ராணுவத்தை சத்யராஜ் விமர்சித்தார்.

இந்திய அரசு சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்வதில்லை என்று தற்போது கூறுகிறது. அது நிஜம் என்றால் அதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இந்திய அரசு ஆயுதங்கள் வாங்குவதற்காக தமிழனின் வரிப்பணமும் செலவிடப்படுகிறது.

ஆனால் அதே ஆயுதம் சிங்கள ராணுவத்தினரின் கைகளுக்கு கிடைக்கும் போது, தமிழனே தமிழனை அழிப்பதற்கு வகை செய்வது போல் இருக்கிறது. எனவே இனிமேலாவது சிங்கள் ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

இலங்கையில் சிங்களர்கள் குடியேறுவதற்கு முன்பாகவே தமிழர்கள் அங்கு வசித்துள்ளனர். அப்படி ஒரு தரப்பினரை வெளியேற்றினால்தான் தீர்வு கிடைக்கும் என்றால் முதலில் சிங்களர்களைத்தான் இலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சத்யராஜ் ஆவேசத்துடன் கூறினார்.

இதேபோல் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் போது உணர்ச்சி மிகுதியால் சில வார்த்தைகள் பேசுவது தவிர்க்க முடியாதது. சட்டத்தை பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் உணர்வால் பேசுபவர்கள் மீது சட்டம் பாயக் கூடாது என்று வலியுறுத்திய சத்யராஜ், ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் ஈனத் தமிழர்கள் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil