இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட வளாகத்தில், சரியாக காலை 8 மணி உண்ணாவிரதம் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மெழுவர்த்தியை ஏற்றி வைத்து உண்ணாவிரதம் தொடங்குவதை முறைப்படி அறிவித்தார்.
மாலை 4 மணி வரை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், ராதாரவி, அஜீத், விஜய், விக்ரம், ஜீவன், பிரசாந்த், ராகவா லாரன்ஸ், பார்த்திபன், நடிகைகள் நயன்தாரா உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரத மேடையில் காலை 8.30 மணியளவில் நடிகர்கள் விஜயகுமார், சந்திரசேகர், ராதாரவி, விஜய், விக்ரம், அர்ஜுன், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், பார்த்திபன், எஸ்.வி.சேகர், நடிகைகள் மனோரமா, ராதிகா சரத்குமர், சந்தியா, மும்தாஜ், இயக்குனர் விசு உட்பட பலர் அமர்ந்திருந்தனர்.
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதத்தை முன்னிட்டு தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.