மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 4ஆம் தேதி மதிமுக நடத்தவிருக்கும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வடசென்னை மாவட்ட மதிமுக செயலாளர் ஜீவன் இதனை வலியுறுத்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை ராணுவத்திற்கு எதிராக குரல் கொடுத்துவரும் வைகோவை, இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கைது செய்திருக்கும், தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து தங்கசாலை அருகே நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் வருகிற 4ஆம் தேதி மதிமுக நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு இடங்களில் அனுமதி மறுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனவே மதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.