நிபந்தனை பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரும் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடந்த 19ஆம் தேதி தமிழ் திரையுலகத்தினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் இயக்குனர்கள் சீமானும், அமீரும் பேசியதாகக் கூறி கியூ பிரிவு காவல்துறை அவர்களை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது.
இவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் விரைவு விசாரணை நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை பிணை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சீமான், அமீரை பிணையில் எடுப்பதற்கான ஆவணங்களை ஒப்படைக்க இயக்குனர் மனோஜ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ராமேஸ்வரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்துக்கு நேற்று சென்றனர். அங்கு நீதிபதி விடுப்பில் இருப்பதால் அப்பணிகளை ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் கவனிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி தங்கவேல் முன்னிலையில் இயக்குனர்கள் சீமான், அமீர் சார்பில் பிணையதாரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் இயக்குனர்கள் சீமான், அமீரின் கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. தலா ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் இரு நபர் பிணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி தங்கவேல், ராமநாதபுரம் விரைவு விசாரணை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை வழங்கினார்.
சீமான், அமீரை நிபந்தனை பிணையில் விடுவிக்கும் உத்தரவு மதுரை மத்திய சிறையில் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. சிறை நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரும் இன்று காலை வாக்கில் விடுதலை செய்யப்பட்டனர்.
இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் தமிழ் திரையுலகினர் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையில் உள்ள தனது வீட்டில் அமீரும், இளையான்குடியில் சீமானும் தங்க திட்டமிட்டுள்ளனர்.