Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசும்பொன்னில் ஜெயலலிதா கா‌ர் க‌ண்ணாடி உடை‌ப்பு: தடியடி-கண்ணீர் புகை வீச்சு!

பசும்பொன்னில் ஜெயலலிதா கா‌ர் க‌ண்ணாடி உடை‌ப்பு: தடியடி-கண்ணீர் புகை வீச்சு!
, வியாழன், 30 அக்டோபர் 2008 (23:51 IST)
மு‌த்துராம‌லி‌‌ங்க‌த் தேவ‌‌ர் ஜெய‌ந்‌தியையொ‌ட்டி பசு‌ம்பொ‌ன்‌‌னி‌ற்கு வ‌ந்து ஜெயல‌லிதா‌வி‌ன் கா‌ர் க‌ண்ணாடி உடை‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் தடியடியு‌ம், க‌ண்‌ணீ‌ர் புகை ‌வீ‌‌சியு‌ம் கூ‌ட்ட‌த்‌தினரை கலை‌த்தன‌ர். இதை‌த் தொட‌ர்‌‌ந்து அ‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

பசு‌ம்பொ‌ன் மு‌த்துராம‌லி‌ங்க‌த் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, சசிகலா ஆ‌கியோ‌ர் இ‌ன்று மலர் வளையம் வைத்து வணங்கினர். அப்போது வெளியே கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக முண்டியடித்துச் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அ‌ப்போது கூட்டத்தினரை காவ‌ல்துறை‌யின‌ர் ஒழுங்குபடுத்திக்கொண்டே இருந்தனர். அந்த நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கார் மீது கல் விழுந்தது. இதனை தொடர்ந்து நினைவிட‌ம் உ‌ள்ள இட‌த்‌தி‌ல் கற்கள் சரமாரியாக வீசப்பட்டன. இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதையடுத்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நடத்தி விரட்டின‌ர். ஆனாலும் தொடர்ந்து கற்கள் பறந்து வந்தன. இதில் ஜெயலலிதா வந்த காரின் கண்ணாடி நொறுங்கியது. தேசிய பாதுகாப்பு படை‌யின‌ரி‌ன் 3 வாகனங்களும், தமிழக காவ‌ல்துற‌ை‌யின‌ரி‌ன் ஒரு வாகனமும் சேதம் அடைந்தன.

மேலும் இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஆயுதப்படை உத‌வி ஆ‌ய்வாள‌ர் அருளானந்தம், பரமக்குடி போக்குவரத்து காவல‌ர் முருகேசன் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இதனால் காவ‌ல்துறை‌யின‌ர் கூட்டத்தினரை கலைக்க தடியடி நடத்தின‌ர். தடியடியில் 16 பேர் காயம் அடைந்தனர். ஆனாலும் தொடர்ந்து கல்வீச்சு நீடித்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதனா‌ல் கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த இடத்தில் செருப்புகளும், கற்களும் சிதறி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது ஜெயலலிதாவை நினைவிடத்தின் பின்வாசல் வழியாக காவ‌ல்துறை‌யின‌ர் பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அருகில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை ஜெயல‌லிதா தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் கல்வீச்சு சம்பவம் குறித்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இந்த தாக்குதல் தி.மு.க.வின் திட்டமிட்ட சதியாகும் என்றார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். இந்தநிலையில், பசும்பொன்னில் நடந்த சம்பவத்தை கண்டித்து கோவை- அவினாசி சாலை‌யி‌ல் உள்ள அண்ணா சிலை முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் செ.ம.வேலுச்சாமி, மலரவன் உள்பட 325 பேர் கைது செய்யப்பட்டனர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, அ.இ.அ.‌தி.மு.க தொண்டர்கள் மறியலில் ஈடுபட வேண்டாம் என்று ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil