பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 101வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் திருவுருவப்படத்திற்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ வெண்கலச்சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழ் தேவரின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இத்திருவுருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அ.இ.அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன், முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர்.தியாகராஜன், ஆர்.தாமோதரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக்அலி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க கட்சி தலைமை அலுவலகத்தில் தேவரின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு கட்சித் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நடந்த குருபூஜையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.