அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சியுடன் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியிருக்கிறார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியுடனோ, காங்கிரஸ் கட்சியுடனோ, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுடனோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று கூறினார்.
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது? என்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகவும் வரதராஜன் குறிப்பிட்டார்.
இலங்கையில் வாழும் ஒரு கோடி பேரில் 30 ஆயிரம் பேர் தமிழர்கள் என்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஆயுதத்தால் வெற்றி கிடைக்காது. சமாதானமாக முடிவு எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் கூறினார்.
மத்திய - மாநில அரசுகள் இலங்கை தமிழர்களுக்கு அனுப்பும் மருத்துவ உதவிகள், உணவு பொருட்களை ஐ.நா. சபையின் மூலமாகவும், செஞ்சிலுவை சங்கங்கள் மூலமாகவும் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.