Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜபக்சே நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: ராமதாஸ்!

ராஜபக்சே நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: ராமதாஸ்!
, வியாழன், 30 அக்டோபர் 2008 (05:32 IST)
இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌‌க்சே ‌நீ‌லி‌க்க‌ண்‌ணீ‌ர் வடி‌க்‌கிறா‌ர் எ‌‌ன்று கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், முதலைக்கண்ணீர் வடித்தல் என்றால் என்ன என்று இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரபல ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலை ஒருமுறை படித்து பார்த்தால் மிக நன்றாக புரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு அவர் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

நியாயமான அரசியல் உரிமைகளுக்காக போராடி வரும் ஈழத் தமிழர்களை முப்படைகளையும் கொண்டு தாக்கி, அங்கு தமிழினத்தையே பூண்டோடு ஒழிப்பேன் என்ற சபதத்துடன் மூர்க்கத்தனமான போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். போர்ப்படையினரின் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழர்கள் அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர்களை எங்களது தமிழ் சகோதரர்கள் என்றும், எங்கள் சொந்த மக்கள் என்றும் நாகூசாமல் அழைக்கிறார்.

அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி தருகிறார். இத்தகைய உதவிப் பொருட்களை இதுவரையில் முன் நின்று வழங்கிய மனிதநேய அமைப்புகளை எல்லாம் தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றி விரட்டியடித்து விட்டு இப்போது ஊரை ஏமாற்ற பார்க்கிறார் ராஜபக்சே.

அரசியல் சிக்கல்களுக்கு போர்ப்படை தீர்வு எதுவும் இருக்க முடியாது என்று இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆம்! சாத்தான் வேதம் ஓதியிருக்கிறது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை, இலங்கை அதிபர் வெகுவாக பாராட்டியிருக்கிறார். அவரது பாராட்டுரையை முதலமைச்சர் கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு விடை காண விரும்பவில்லை.

ஆனால் பிளவுபடாத இலங்கையின் கட்டமைப்புக்குள் நியாயமான அரசியல் தீர்வு காண தமிழக முதலமைச்சர் கருணாநிதி விரும்புவதாகவும், அதற்கான அவரது எண்ணங்களையும், திட்டங்களையும் பாராட்டுவதாகவும் ராஜபக்சே கூறியிருக்கிறார். தமிழர்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு இதுதான் என்பது முதலமைச்சர் கருணாநிதியின் நிலைப்பாடா? இதற்கு அவர் விடையளிக்க கடமைப்பட்டிருக்கிறார்.

தனது சிறப்புத்தூதர் பசில் ராஜபக்சே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும், இந்திய உயர் அதிகாரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவு ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்திருந்தது என்றும் ராஜபக்சே மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். ஆனால் இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படும்போதுதான் நமக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படும். நாமெல்லாம் மன நிறைவு அடைய முடியும்.

இதற்கு முதல் படி இலங்கையில் உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும். இதில் தலையிட முடியாது என்று இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க கூடாது. தட்டிக் கழிக்கவும் நாம் விடக்கூடாது.

சண்டை நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைகளை தொடரும்படி இந்தியா எச்சரிக்க வேண்டும். அப்படி எச்சரிக்கும்படி இந்திய அரசை தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் சார்பில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதற்கான பொறுப்பை முதலமைச்சர் கருணாநிதி ஏற்க வேண்டும். அப்போதுதான் இலங்கை தமிழர்களின் துயர் துடைப்பதற்காக நாம் திரட்டி வரும் நிவாரண நிதியும் அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லையேல், இதுவும் ஒரு சுனாமி நிவாரணம் போல் அமைந்துவிடும்'' எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil