தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, முதல்வருக்கு இலங்கை தமிழர் பிரச்சனை பயன்பட்டது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும், இல்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இரண்டு வாரங்களும் ஓடிவிட்டன. போர் நிறுத்தமும் செய்யப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவில்லை.
டெல்லிக்கு கொடுத்த தந்தி, மயிலை மாங்கொல்லை பொதுக் கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா நாடகம், பிரதமருடன் தொலைபேசி தொடர்பு, மழையில் கட்டாய மனிதச் சங்கிலி என்றெல்லாம் முதல்வர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உணர்ச்சிப் பிழம்பாக ஆனார்.
பிறகு, இலங்கை அரசின் சிறப்பு பிரதிநிதி டெல்லி வருகை, சோனியா காந்தி தொலைபேசியில் முதல்வருடன் பேச்சு, வெளியுறவுத் துறை அமைச்சர் சென்னையில் முதல்வரை வீட்டில் சந்தித்தது போன்றவையெல்லாம் நடந்தவுடன், இலங்கை தமிழர் பிரச்சனையை காற்றுப்போன பலூனாக முதல்வர் ஆக்கிவிட்டார். இது ஒன்றும் புதிதல்ல. 1971ல் காவிரிப் பிரச்சனை, 1974ல் கச்சத் தீவு பிரச்ச னை போன்றவற்றை நாம் பார்த்துக்கொண்டுதானே வருகிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை, முதல்வரைப் பொருத்தவரையில் ஒரு தற்காலிக நிவாரணியாகவே இருந்தது. தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அவருக்கு பயன்பட்டது.
முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்ட விதத்தை நாம் பாராட்டுவதைவிட, இலங்கை அதிபர் ராஜபக்சே வெகுவாக பாராட்டியுள்ளார்.
முதல்வர் முதிர்ந்த அரசியல்வாதி என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும் தமிழர் பிரச்சனைக்கும் தீர்வுகாண பாடுபடுகிறார் என்றும், மத்திய அரசின் அனுமதியோடு தங்கள் நாட்டிற்கு அவர் விஜயம் செய்ய வேண்டுமென்றும் இலங்கை அதிபர் வேண்டுகோள் விட்டதில் இருந்து, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எத்தகைய மகத்தான பணியை முதல்வர் ஆற்றியிருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.