அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இதுபற்றி வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள முறையீட்டில், மலேசியாவிலிருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான், ஜெயலலிதாவிற்கும் ஏற்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் மைந்தன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதில் ‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்காக், தாய்லாந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறினர்.
இதன் தலைமையகம் கனடாவில் குவிஸ் ஹவுஸ் என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பக்க கடிதம் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.