விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோவை கைது செய்திருப்பதில் தவறில்லை என்றாலும், இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.
கோவையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பதை தவறு என்று தாம் சொல்ல மாட்டேன்.
இதே காரணத்திற்காக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரையும் கைது செய்து இருந்தால் வைகோ கைது நடவடிக்கை நியாயமானதாக அமைந்திருக்கும் என்று கூறினார்.
எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வைகோவையும், கண்ணப்பனையும் தமிழக அரசு கைது செய்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மதுரையில் ஜனதா கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதில் 100 பேருக்குத் தொடர்புள்ளது. ஆனால் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் மூலம் தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கைது செய்ய நடந்த நடவடிக்கைகள் உண்மைதான் என்றும், அதற்காக காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டார்.
ஆனால் இந்த விஷயத்தில் உண்மையில்லை என மாநில காவல்துறை தலைமை இயக்குனர் அறிக்கை விடுவதாகவும் அவர் குறை கூறினார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 3-வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அவர், மத்தியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே ஆட்சி அமைப்பது தொடர்பாக 3-ஆவது அணிக்கு வாய்ப்புள்ளது என்றார்.