"
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பது மட்டுமே மனநிறைவை தரும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை இராணுவத்தினர் விமானங்களின் மூலம் குண்டுகளைப் போட்டும், ஏவுகணைகளின் மூலம் நடத்தும் தாக்குதல்களால் ஒவ்வொரு நொடியும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இலங்கைத் தமிழ் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் ஒரே நோக்கத்திற்காக, இலங்கை அரசு தனது இராணுவ நடவடிக்கைகளை உடனே, நிறுத்தி போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென்றும், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையையும், தமிழ்நாடு மக்கள் சார்பில் வற்புறுத்தி வந்தோம்.
இந்திய அரசு, இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை எடுத்துக்கூறி வலியுறுத்தி போரை நிறுத்துமாறு வேண்டுமென்றும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து அனுப்பிட அனுமதியும் கேட்கப்பட்டது.
பல நாட்களுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த இந்தியாவின் அயலுறவுத்துறை அமைச்சர், போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசிடம் வற்புறுத்தியதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கை அரசின் சார்பில் போர் நடத்தி வெற்றி பெற்ற பின்னர் தீர்வுக்கு ஆலோசனை கூறப்படும் என்றே கூறுகிறது. இது பற்றியும் தமிழக முதலமைச்சரோ, அயலுறவுத்துறை அமைச்சரோ திட்டவட்ட பதிலைத் தரவில்லை.
எனவே, இந்த அறிவிப்புகள் எந்த மனநிறைவையும் தரவில்லை. போர் நிறுத்தம் அறிவிப்பது மட்டுமே மனநிறைவை தரும். உடன் போர் நிறுத்தவும், துன்பப்படுவோர்க்கு உதவிட அனுமதி என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும்'' என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.