இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட, இந்திய அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. இலங்கை அதிபரின் தூதரான பாசில் ராஜபக்சே, மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை அரசு, அப்பாவித் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும், அரசியல் தீர்வுக்கான முயற்சியை தொடரும் என்றும், இந்தியா வழங்கும் 800 டன் உணவுப் பொருளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.அமைப்பு மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க இலங்கை அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அப்போது உறுதி கூறப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம், தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச் சூடுகளை தவிர்ப்பது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இது தவிர, அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்படுவது குறித்து முயற்சி மேற்கொள்வதாக பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார். இவை அனைத்தும் செயல் வடிவம் பெற மத்திய அரசு தொடர் முயற்சி எடுக்க வேண்டும்'' என்று வரதராஜன் கூறியுள்ளார்.