பீகார் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்தின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்கியமைக்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு, பீகார் முதலமைச்சர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிட தமிழக அரசின் சார்பில் பீகார் மாநிலத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் முதலமைச்சர் கருணாநிதியால் ஏற்கனவே வழங்கப்பட்டது.
அத்தொகையினைப் பெற்றுக் கொண்டு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ''முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக 10 கோடி ரூபாய் நிதி வழங்கிய தங்களை எண்ணி மிகுந்த பெருமையடைகிறேன்.
தாங்கள் அளித்துள்ள நிவாரண நிதி பாதிக்கப்பட்ட பீகார் மாநில மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களைத் துடைப்பதில் தாங்கள் அளித்துள்ள இந்த உதவி பெரிதும் துணையாக அமையும்.” என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.