இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவு செய்திட தங்கள் இயக்கதின் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.
நக்கீரன் இதழின் கேள்விகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அளித்துள்ள பதிலில் இவ்வாறு கூறியுள்ள பிரபாகரன், சிறிலங்க இராணுவத்தின் தாக்குதலால் வீடிழந்து நிற்கும் மக்களுக்கு உடனடி நிவாரணத்தைப் பெற்றுத் தந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“தமிழக முதலமைச்சர் கலைஞர் ஒரு தமிழ் தேசியவாதி. தமிழ் ஈழத்தின் மீது கட்டவிழத்துவிடப்பட்டுள்ள சிங்கள அரச பயங்கரவாதத்தை எதிர்த்தது மட்டுமின்றி, அதனை செயலிலும் காட்டியுள்ளார்” என்று பிரபாகரன் கூறியுள்ளார்.
“விவரிக்க முடியாத துயரத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவாக நின்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆதரவு எதிர்காலத்திலும் தொடரவேண்டும்” என்று கூறியுள்ள பிரபாகரன், “ஜெயலலிதா கூட எங்களுக்காக குரல் கொடுத்தார், இப்பொழுது அவருடைய நிலை மாறிவிட்டது, அதுபற்றி நாங்கள் ஏதும் கூறுவதற்கில்லை” என்று கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தின் தலைவர்களின் ஆதரவு நிச்சயாமாக எங்களுக்கு கூடுதல் பலமாகும் என்று கூறியுள்ள பிரபாகரன், தமிழர்களின் மீது சிறிலங்கப் படைகள் இனப்படுகொலையை நடத்தி வருகின்றன என்றும், அதன் விளைவாக ஒரு லட்சம் தமிழர்கள் தங்கள் வீடுகளைத் துறந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையின் வட பகுதியின் மீது தாக்குதல் நடத்திவரும் சிறிலங்க படைகள் மீது தாங்கள் கொடுத்துவரும் பதிலடியில் இராணுவத்திற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டு வருகிறது என்றும் பிரபாகரன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைமையிடம் அமைந்துள்ள கிளிநொச்சியை சிறிலங்க படைகள் சுற்றி வளைத்துவிட்டதாக வரும் செய்திகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரபாகரன், அவர்கள் கிளிநொச்சியை அண்டி தாக்குதல் நடத்திவருவது உண்மைதான் என்றும், ஆனால் கிளிநொச்சியை கைப்பற்ற நினைப்பது ராஜபக்சவுக்கு பகல் கனவாகத்தான் முடியும் என்று கூறியுள்ளார்.
சிறிலங்க இராணுவத்திற்கு ஆயுத உதவியும், பயிற்சியும் இந்தியா அளிப்பதாக வரும் செய்திகள் தங்களை துயரப்படுத்துவதாகக் கூறியுள்ள பிரபாகரன், ராடார் இயக்கும் பயிற்சியை இந்தியா அளித்துவருவதாக வந்த செய்திகள் துயரமானது என்று கூறியுள்ளார்.