விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு செயல்பட்டு வரும் திமுக அரசை, மத்திய அரசு கலைப்பதுடன், முதல்வர் கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன் ஆகியோரை தாம் அறிக்கை வெளியிட்ட பின்னரே தமிழக அரசு கைது செய்துள்ளது.
மேலும், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை கைது செய்யாமல், வைகோவை மட்டும் கைது செய்துள்ளது, முதல்வர் கருணாநிதியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என தாம் மீண்டும் வலியுறுத்திய பின்னரே, இயக்குனர்கள் இருவரும் அரை மனதுடன் கைது செய்யப்பட்டனர்.
தமிழக முதல்வரே விடுதலைப் புலிகளின் அனுதாபி எனத் தெரிவித்துள்ள அவர், வைகோவை கைது செய்த போதே ஏன் இயக்குனர்கள் அமீர், சீமானை தமிழக அரசு கைது செய்யவில்லை.
மேலும், திமுக அரசு நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் அவர்கள் இருவரும் பங்கேற்பதற்கு அவகாசம் அளித்து விட்டு இறுதியாகவே அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவே தமிழக அரசு அவர்களை அரைமனதுடன் கைது செய்தது என்பதற்கு ஆதாரம்.
எனவே, விடுதலைப்புலிகளின் அனுதாபியான கருணாநிதியை கைது செய்வதுடன், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க அரசை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.