கொட்டும் மழையிலும் தமிழர்கள் கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினர், அனைத்துக் கட்சியினர், வழக்கறிஞர்கள், மாணவ மாணவிகள், கலை உலகத்தினர் என தமிழர்களின் உணர்வு பட்டுப்போய் விடவில்லை என்பதை மெய்ப்பிக்கின்ற வகையிலே மனிதச் சங்கிலி வெற்றி கண்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலி பெரு வெற்றி பெற்றதைப்பற்றி?
மனிதச் சங்கிலிக்கு மேலும் பெருமை சேர்த்தது மழை தான்; அதனால் "மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்'' என்போம். 21ஆம் தேதி மனிதச் சங்கிலி நடத்துவதாக இருந்து பெருமழை காரணமாக அதனை ஒத்திவைக்க நேர்ந்த போது, 24ஆம் தேதியும் மழை பெய்தால் என்ன செய்வது, தீபாவளி நெருங்கிவிடுமே என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. அதைப் போலவே 24ஆம் தேதி சரியாக 3 மணிக்கு பெருமழை நகரெங்கும் கொட்டியது. எனினும் அந்தக் கொட்டும் மழையிலும் தமிழர்கள் கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து - அனைத்துத் தரப்பினர், அனைத்துக் கட்சியினர், வழக்கறிஞர்கள், மாணவ மாணவிகள், கலை உலகத்தினர் என தமிழர்களின் உணர்வு பட்டுப்போய் விடவில்லை என்பதை மெய்ப்பிக்கின்ற வகையிலே மனிதச் சங்கிலி வெற்றி கண்டுள்ளது. அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொரு வருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொடுங்கையூரில் பிரதமர் ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியதாக செய்தி வந்திருக்கிறதே?
இது கடுமையான குற்றம். தண்டிக்கத் தக்கது. தலைவர்களின் சிலைகளை உடைப்பவர்களை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்யவும், குண்டர் சட்டத்தில் வழக்கு தொடரவும் காவல் துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி தங்கள் கடமையை அவர்கள் செய்யும் அதே நேரத்தில் யாரோ சில சமூக விரோதிகள் திட்டமிட்டு வேண்டுமென்றே ரரஜிவ் காந்தி சிலையை உடைத்திருக்கக் கூடும் என்று நினைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் காங்கிரசுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படாதா என்று விஷமிகள் சிலர் தமிழ்நாட்டில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகமூடி கிழியும் நாள் விரைவில் வரும்.
ஜெயலலிதா ஒருடன் கரும்புக்கு ரூ.2,000 விலை நிர்ணயிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறாரே?
நாம் ரூ.2,000 என்று விலை நிர்ணயம் செய்திருந்தால், ரூ.3,000 கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருப்பார். அது தானே எதிர்க்கட்சியின் இலக்கணம்!
அப்படியென்றால் ஆளுங்கட்சியின் இலக்கணம் என்ன?
எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் அவற்றை நிறைவேற்றுவது தான் ஆளுங்கட்சியின் இலக்கணம். உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் 2 நாட்களுக்கு முன்பு மின்சாரக் கட்டணத்தில் ஏழைகளுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் ஒரு சிறு உயர்வு விதிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த அதே நாளில் அதுபற்றி விவாதித்து, அந்த சிறு கட்டண உயர்வையும் ரத்து செய்தது தான் தி.மு.க. அரசு.
வைகோ சிறையிலே இருப்பதைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில் ஏதோ செய்தி வெளிவந்ததாகக் கூறி, தங்களைக் குற்றம் சாட்டி அதற்கு மறுப்பு ஒன்று ம.தி.மு.க. சார்பில் வெளிவந்துள்ளதே?
பதில்:- பச்சைப் பொய்யை அடுக்கி அறிக்கை வெளியிடுவதையே தொழிலாகக் கொண்டவருக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும். அவர்களுக்கு சிறையில் கொடுக்கப்பட்டுள்ள முதல் வகுப்புக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படும், எத்தகைய வசதிகள் செய்யப்படும் என்பது இவருக்கு மட்டுமல்ல - பொதுவாக எல்லா முதல் வகுப்பு கைதிகளுக்கும் வழங்கப்படுகின்ற பொருட்களைத் தான் ஒரு வேளை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருப்பார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு இவர் அரசுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் அவப்பெயர் உண்டாக்க ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார், அவ்வளவு தான்!
இவரோடு கைது செய்யப்பட்ட கண்ணப்பனுக்கு உடல் நலக்குறைவு என்றதும், அவரை மருத்துவர்களைக் கொண்டு சோதனை செய்யச் செய்து மருத்துவர்களின் அபிப்பிராயத்தைப் பெற்ற பிறகு காரிலோ, பேருந்திலோ, வேனிலோ, ரயிலிலோ அவர் பயணம் செய்ய வேண்டாமென்று கோவை யிலிருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார் என்பதை இதயம் உள்ளவர்களாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.
வைகோ கைதானதைக் கண்டித்து டெல்லி மாநிலங்கள் அவையில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்ததைப் பற்றி?
விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், நான் ஆட்சியிலே இருந்திருந்தால் அவர்கள் எல்லாம் அப்படிப் பேசியிருப்பார்களா நான் உடனடியாக கைது செய்திருப்பேனே என்றெல்லாம் அங்கலாய்த்து முதன் முதலாக அறிக்கை விட்டவரே ஜெயலலிதா தான். அவர் பேச்சை ஆதரிக்காமல் அவர் தலைமையில் உள்ள கட்சியினர் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்திருப்பது வேடிக்கை தான்.
கரும்பு விலையை மத்திய அரசு ரூ.1,550 என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் மாநில அரசு டன் ஒன்றுக்கு ரூ.450 சேர்த்து 2,000 ரூபாயாக அறிவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே, அவருடைய ஆட்சிக் காலத்தில் கரும்புக்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டது?
1999-2000ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை ரூ.561. அப்போது தி.மு.க. அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.740. டன் ஒன்றுக்கு ரூ.179 அதிகம்.
2000-2001ஆம் ஆண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.595. அந்த ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 8.5 விழுக்காடு சர்க்கரை கட்டுமாணம் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.775 என்றும் - 10 விழுக்காடு கட்டுமாணம் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1,000 என்றும் விலை நிர்ணயம் செய்தோம்.
அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றார். 2001-2002ஆம் ஆண்டு மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 620.50 என்று விலை நிர்ணயம் செய்தது. ஆனால் ஜெயலலிதா அரசு ஒரு ரூபாய் கூட அதிகமாக அந்த விலையை அதிகரிக்கவில்லை. 2002-2003ஆம் ஆண்டு இங்கே தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியிருந்த போது, மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.695 என்று நிர்ணயம் செய்த போதும், மாநில அரசு ஒரு ரூபாய் கூட அதிகப்படுத்தவில்லை. 2003-2004ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.730 என்று நிர்ணயம் செய்த போதும், ஜெயலலிதா அரசு ஒரு ரூபாய் கூட விலையை உயர்த்தவில்லை. 2004-2005ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.745 என்று விலை நிர்ணயம் செய்தது. அந்த ஆண்டிலும் ஜெயலலிதா அரசு ஒரு பைசா கூட விலையை உயர்த்தவில்லை.
2005-2006ஆம் ஆண்டுதான் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மத்திய அரசு ரூ.795 என்று விலை நிர்ணயம் செய்த போது, தமிழக அரசு தேர்தலை மனதிலே கொண்டு ரூ.1,014 என்று விலை நிர்ணயம் செய்தது.
இந்த அளவிற்கு செயல்பட்ட ஜெயலலிதா தான் தற்போது கழக அரசைப் பார்த்து விலையை உயர்த்தியது போதவில்லை என்றும் ரூ.2,000 என்று நிர்ணயிக்க வேண்டுமென்றும் அறிக்கை விடுகிறார். அதற்கு அவருக்கு ஏதாவது அருகதை உள்ளதா என்பதை கரும்பு விவசாயிகள் தான் கூற வேண்டும்.
ஆனால் 2006ஆம் ஆண்டு பதவிப்பொறுப்புக்கு தி.மு.க. அரசு வந்தது முதல், 2006-2007ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு ரூ.802.50 என்று விலை நிர்ணயம் செய்த போது, தி.மு.க. அரசு ரூ.1,025 என்றும், 2007-2008ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.811.80 என்று விலை நிர்ணயம் செய்த போது, தமிழக தி.மு.க. அரசு ரூ.1,034 என்றும் விலையை உயர்த்தியது. இந்த ஆண்டு 2008-2009இல் மத்திய அரசு கடந்த ஆண்டை விட எந்த உயர்வும் செய்யாமல், கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த அதே ரூ.811.80 என்று அறிவித்திருக்கின்ற நிலையில், தமிழக தி.மு.க. அரசு கடந்த ஆண்டு ரூ.1,034 என்று அறிவித்ததற்கு மாறாக இந்த ஆண்டு ரூ.1,050 என்று விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்குத் தான் அம்மையார் குற்றம் சாட்டுகிறார். ஆனால் கரும்பு விவசாயிகள் உண்மை நிலையை உணருவார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.