இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்துக்கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டாடம் சென்னை முதல் செங்கல்பட்டு வரை 60 கி.மீ. தொலைவிற்கும் மேல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மிகப் பிரம்மாண்டமான அணிவகுப்பாக இன்று நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனித சங்கிலி அணிவகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர் கருணாநிதி, மனித சங்கிலி நடைபெறும் இடங்களை வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.
மனித சங்கிலியில் கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், எம்.ஜி.ஆர். கழகம், புதிய தமிழகம், ஜனநாயக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்படத்துறையினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து முழங்கங்கள் எழுப்பியதோடு, இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் குறளகம், அண்ணா சிலை வரை சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்களுடன் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார்.
கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் பாரதிராஜா சீமான், அமீர், நடிகர் சத்யராஜ் உள்பட திரைப்பட துறையினர் மற்றும் தென்சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அண்ணாசிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் அணிவகுப்பில் பங்கேற்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க. பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் சென்னையில் அக்டோபர் 21ஆம் தேதி மனிதச் சங்கிலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மனித சங்கிலி அணிவகுப்பு போராட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை வரை மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தினர்.