ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரில் பிபி குளம் எனுமிடத்தில் சுப்பிரமணிய சுவாமியின் அலுவலகம் உள்ளது. இன்று மதியம் புரட்சிகர இளைஞர் முன்னனி எனும் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 25 பேர் கற்களை வீசி அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாகவும், அதன்பிறகு அலுவலகத்திற்குள் புகுந்து விளக்குகள், மேசை- நாற்காலிகளை உடைத்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
இத்தாக்குதலின்போது, அலுவலகத்திலிருந்த உறுப்பினர் படிவங்கள் கிழித்தெறியப்பட்டதாகவும் கூறிய அக்கட்சியின் மாவட்டத் தலைவர் புருஷோத்தமன், தன்னையும் அக்கூட்டத்தினர் தாக்கியதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இத்தாக்குதல் நடக்கும்போது பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அலுவலகத்தை தாக்கியவர்கள் சுப்பிரமணிய சுவாமியை நாடுகடத்த வேண்டும் என்று முழக்கமிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.