வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. சென்னையில் இன்று பிற்பகல் முதல் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக பெய்து வரும் பருவமழை, அடுத்த 36 மணி நேரத்துக்கு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சென்னையில் நேற்று வெயில் அடித்தது. இன்று காலையிலும் வெயில் அடித்தது.
திடீரென பிற்பகல் 2 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் குளிர்ந்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை நகரமே தத்தளித்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பள்ளிக்கூடங்கள், சமூக கூடங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மக்கள், இன்று பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதோடு பள்ளி மாணவ- மாணவிகள் நனைந்த படி வீடு திரும்பினர்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.