மின் உற்பத்திக்கு மாற்று வழிகளை முன் வைத்தும், தமிழக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நவம்பர் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் மின்வெட்டு பல மாதங்களாக தொடர்கிறது. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழிற் கூடங்களில் 11 லட்சம் உள்ளன. அவற்றில் 80 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். தொழிற் கூடங்கள், மருத்துவமனைகள் இந்த மின் வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு முன் கூட்டியே சரிவர திட்டமிடாததுதான் இந்த மின்வெட்டுக்கு காரணம்.
மின் உற்பத்திக்கு மாற்று வழிகளை முன் வைத்தும், அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும்.
நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள், வட்ட தலைநகரங்கள், நகராட்சிகள் ஆகிய 100 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.