சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானமும், சரக்கு விமானமும் ஒரே ஓடுபாதையில் மோத இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டதால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 49 பயணிகளுடன் பாராமவுண்ட் ஏர்வேஸ்-க்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று அதன் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.
அதே சமயத்தில், அதன் அருகாமையில் உள்ள மற்றொரு பகுதியில் இருந்து சரக்கு விமானம் ஒன்று துபாய்-க்கு அதே ஓடு தளத்தில் எதிரே வேகமாக வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, இதைக் கவனித்த விமானநிலைய மேலாளர் யுகானந்தம், உடனடியாக சரக்கு விமானத்தின், விமான ஓட்டியைத் தொடர்பு கொண்டு விமானத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டார். இதனால் பயணிகள் விமானத்தில் இருந்த 49 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சரக்கு விமானத்தை தடுத்திருக்காவிட்டால் அந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த மற்றொரு விமானமான பாராமவுண்ட் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து துபாய் செல்ல இருந்த இத்திகாடு சரக்கு விமானத்தின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு அதன் விமான ஓட்டியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.