இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன், ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சனையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்ற சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவே இல்லை. இலங்கை அரசு வெளியிட்டு வரும் பொறுப்பற்ற கருத்துகள் தமிழக மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்திய அரசு அளித்துவரும் இதற்கான விளக்கங்களும் மன நிறைவையும், நம்பிக்கையையும் தருவதாக இல்லை. எனவே தமிழக மக்கள் தங்களது ஆத்திரத்தையும், கவலையையும் தெரிவிக்கும் வகையில் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுப்பிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கை தமிழ் மக்களை வைத்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே அறிக்கை போர், விமர்சன போர் நடத்துவதை கைவிட வேண்டும்.
இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன், ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
இந்த பிரச்சனையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா? என்ற சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொள்கிறது.
நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தமிழகத்தின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் விதத்திலும் அமைய வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வற்புறுத்த விரும்புகிறது'' என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.