இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்த நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது முதல்வர் கருணாநிதியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாக ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகப் வைகோ பேசுவதற்கு முன்பாக, ராமேஸ்வரத்தில் திரையுலகினர் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் இயக்குனர் பாரதிராஜா, சீமான், அமீர் ஆகியோர் இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அப்படி இருக்கும் போது, வைகோவை மட்டும் கைது செய்த தமிழக அரசு, பாரதிராஜா, சீமானை கைது செய்யாதது ஏன் என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் வைகோவை மட்டும் செய்து இவ்விஷயத்தில் பாரபட்சம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், முதல்வர் கருணாநிதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுவதுடன், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் அவர் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதை தெளிவுபடுத்துவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.