சென்னை: இலங்கை தமிழர்களுக்கு தார்மீக முறையில் நியாயமான வழியில் ஆதரவு அளித்த காரணத்திற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளது, காங்கிரஸ் தயவில் நடைபெறும் தமிழக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே என கண்ணப்பன் சாடியுள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரித்ததாகவும், பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றம்சாற்றப்பட்டு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், அக்கட்சியின் மூத்த தலைவர் கண்ணப்பனும் நேற்று தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுக்கு முன்பாக கண்ணப்பன் அளித்த பேட்டியில், இந்த கைது நடவடிக்கை முற்றிலும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரிலேயே மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் தயவில் தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே முதல்வர் கருணாநிதி இதனைச் செய்துள்ளார் என குற்றம்சாட்டினார்.
விடுதலைப் புலிகளுக்கு பண உதவி, ஆயுத உதவி, ஆள் சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே அது குற்றமாகக் கருதப்படும். இந்நிலையில், இலங்கைக் தமிழர்களுக்கு ஆதரவாக தார்மீக முறையில் குரல் கொடுத்ததை எப்படி குற்றம் என்று கூறமுடியும் என்றும் கண்ணப்பன் அப்போது கேள்வி எழுப்பினார்.