பிரிவினை வாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் என்றும் தமிழக அரசு இத்தகைய பேச்சுக்களை அலட்சியம் செய்யாமல், மெத்தனமாக இல்லாமல் உறுதியுடன் செயல்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன். மொகலாயர் காலத்திலும் சரி, ஆங்கிலேயர் காலத்திலும் சரி, தமிழகம் தனது பங்கை செய்துள்ளது. அகிம்சை முறையானாலும், ஆயுதம் ஏந்திய போராட்டமாக இருந்தாலும் தமிழகத்தின் பங்கு அளப்பரியது.
தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தோன்றி அதிலிருந்து வேறு சில கட்சிகளும் தோன்றிய பிறகு தமிழகத்தில் பிரிவினை கோஷம் எழுந்தது. நாத்திகம், பிரிவினைவாதம் என்னும் இரண்டு தூண்களின் ஆதாரத்தில் எழுந்தது தி.மு.க. ஆனால் 1967 தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க இந்த இரு விடயங்களையும் எழுப்பவேயில்லை. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க பிரிவினை வாதத்தை பகிரங்கமாக கைவிட்டது.
தமிழக மக்கள் மத்தியில் தோற்றுப்போன பிரிவினை வாதத்தை மீண்டும் கிளப்ப சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெறப்போவதில்லை.
தமிழகத்தில் உள்ள பெருவாரியான மக்கள் இலங்கையில் இன்னலுறும் தமிழருக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அதைப் பயன்படுத்தி விடுதலைப்புலி ஆதரவு கோஷம் எழுப்புபவர்களும், தனித்தமிழ்நாடு கோரிக்கை வைப்பவர்களும் லாபம் பெற முயற்சி செய்வதை அறிந்து தமிழக மக்கள் இந்த பிரச்சனையிலிருந்து பின் விலகுவார்கள். அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழக நலனே.
எனவே பிரிவினை வாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள். தமிழக அரசு இத்தகைய பேச்சுக்களை அலட்சியம் செய்யாமல், மெத்தனமாக இல்லாமல் உறுதியுடன் செயல்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.