இலங்கையில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது என்று குற்றம்சாற்றியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த கொடுமையை எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் அதற்கு மனமில்லாதவர்கள் தேவையற்ற பிரச்சனைகளையும் வாதங்களையும் எழுப்பி தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரச்சனை என்பது சிங்கள ராணுவத்திற்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வருகிற சண்டை என்பது மட்டுமல்ல, அது இலங்கையில் தமிழ் பேசுகின்ற 52 லட்சம் மக்களுடைய உரிமைப் பிரச்சனை என்றார்.
இலங்கையில் சம உரிமை கேட்டு போராடி வரும் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் ராஜபக்சே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாற்றிய ராமதாஸ், இது வேறு ஒரு நாட்டில் நடைபெறுகிற உள் விவகாரம் என்று இந்தியா பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது என்றும் மாறாக, உரிமையோடு தலையிட்டு தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.
''ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்க மனமில்லை என்றாலும், அவர்களை கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்திற்கு மறைமுகமாக அளித்து வரும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுத்தினார்.
சென்னையில் நாளை நடைபெறும் மனிதச்சங்கிலியில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே நான் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்த ராமதாஸ், இந்த அணிவகுப்பில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அரசியல் கருத்துவேறுபாடுகளை இதில் காண்பிக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கூறிய அவர், ஆளும் தி.மு.க.வுடன், பா.ம.க.விற்கு கருத்துவேறுபாடுகள், அரசியல் மோதல்கள் இருந்தாலும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக அவற்றை ஒதுக்கிவிட்டு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளை பா.ம.க ஆதரிக்கிறது, இதுதான் எங்கள் நிலைப்பாடு என்றார்.
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி என்று கூற முடியாது என்று தெரிவித்த ராமதாஸ், ''இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது, பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறார்கள், இந்திய அரசின் சார்பாக உணவும், மருந்தும் நேரடியாக இலங்கைக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் வந்தால்தான் திருப்தியாக இருப்போம்'' என்றார்.