விவசாய வளர்ச்சிக்கான சர்வேதச நிதியும், தமிழ்நாடு அரசும் இணைந்து ரூ.298.65 கோடி மதிப்பீட்டில் 8 வருட “சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டம்” ஆறு கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் விவசாய வளர்ச்சி நிதியின் டெல்லி பிரிவு இணையாளர் அனிருத் திவாரி, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் உதயச்சந்திரன், திட்ட இயக்குநர் ஸ்வர்ணா, அலுவலர்கள் முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலர் அசோக் வரதன் ஷெட்டியால் துவக்கி வைக்கப்பட்டது.
கடலோர சமுதாய மக்களின் நிலைத்த வாழ்வாதாரம் தன்னிறைவு பெறுவதற்கும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நல்ல முறையில் நிர்வகிக்கவும் வழிவகை செய்கிறது. மேலும், இத்திட்டம் கடலோர கிராமங்களில் வசிக்கும்
மீன்பிடி படகுகள் மூலம் கடலில் மீன் பிடிப்பவர்கள், மீனவ மற்றும் வேளாண் கூலித் தொழிலாளர்கள், சிறிய அளவில் மீன் தொழில் செய்யும் மகளிர் மற்றும் மீன் பதப்படுத்துவோர், சிறு மற்றும் குறு விவசாயிகள், அதிக வருமானம் தரா தொழில் செய்யும் இதர பிரிவினர்கள் கிளிஞ்சல் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அமையும்.
அத்துடன் இத்திட்டம் சமுதாய வளர்ச்சிக்கான திட்டமிடுதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பை பலப்படுத்துதல், மீன் விற்பனை சங்கங்களை அமைத்தல், சந்தை இணைப்புடன் கூடிய சிறு தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வாழ்க்கை கல்வி பயிற்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பயனை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்.
மூன்று அடுக்கு கொண்ட இத்திட்டம் மாநில அளவிலானத் திட்ட மேலாண்மை பிரிவு சென்னையிலும், மாவட்ட அளவில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்த திட்ட நிறைவேற்றும் அலுவலகம் மற்றும் அதிகபட்சமாக ஏழு கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய கிராம கூட்டு மேம்பாட்டு மையம் ஆகியவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுபாட்டில் தமிடிநநாடு மகளிர் நல மேம்பாட்டு கழகம் செயல்படுத்தி வருகிறது.