''தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசி வரும் வைகோ, ம.தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கண்ணப்பன் ஆகியோர் மீது தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழம் மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் மலரும் என்று ம.தி.மு.க அவைத் தலைவர் கண்ணப்பன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசியுள்ளார். இந்த கருத்தரங்கில் விடுதலைப்புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாம்.
மேலும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான் என்று பேசியுள்ளார். இந்த பேச்சுக்கள் அப்பட்டமான தேச விரோத பேச்சுக்களாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் விதத்தில் பேசியுள்ளனர். இதையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இந்த பேச்சுக்களுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பாராட்டுக்கு கூறியது.
இலங்கைத் தமிழர்களுக்காக ரத்தம் கொதிக்க பேசிய ஈழ ஆதரவு தலைவர்கள் மலேசிய நாட்டின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஹின்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி, பேரணி, பொதுக் கூட்டம் நடத்தாதது ஏன்?
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கருணாநிதி, விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் பா எழுதினார்.
சில மாதங்களுக்கு முன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய ம.தி.மு.க.வைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், தி.மு.க அரசு அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கூறி விடுதலை செய்துவிட்டது.
தமிழ், தமிழர் என்று கூறி தனிநாடு கோரும் இந்த தேசிய விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசி வரும் தலைவர்கள் மீது தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தை புலி ஆதரவு தேச விரோதிகளிடமிருந்து காத்திட தேசபக்த தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று ராம கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.