இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 2,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் திருமாவளவன் நுழையாமல் இருக்க காவல்துறையினர் அரண் அமைத்து நின்று கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமையில் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தையினர் காலை 9 மணி அளவில் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கும் சென்ட்ரல் ரயில்வே யார்டு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த மறியல் போராட்டத்தால் டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு விரைவு ரயில், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் உள்பட 5 ரயில்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலும் சில ரயில்கள் புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டன. சென்ட்ரலுக்கு வரவேண்டிய 12 ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இந்த மறியல் போராட்டத்தினால் ரயில் போக்குவரத்தில் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பேசிய மாநில பேச்சாளர் தமிழரசன், ''ஈழத் தமிழர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க ராணுவத்துக்கு இந்திய அரசு எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாது என்றும், சிறிலங்காவில் நடந்து வரும் போரை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி, ஜெயபுரம், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் மறியல் செய்த நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தையினர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் அப்துல் நாசர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதே போல் தமிழகம் முழுவதும் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2,500 பேர் கைது செய்யப்பட்டனர்.