மின்வெட்டு பாதிப்புகளை களைந்திடக் கோரி தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மின்வெட்டு காரணமாக தமிழ்நாட்டில் சிறிய, பெரிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீட்டு மின்சாரம் பயன்பாட்டின் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணத்தை 50 விழுக்காடாக உயர்த்துவது என அரசு அறிவித்துள்ளது.
600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோர் 20 விழுக்காடு குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கும் மேல் கட்டண உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மாலை நேரத்தில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது போன்ற அறிவிப்புகள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த மின்சாரத்தில் எரியக்கூடிய சி.எல்.எல் பல்புகளை மலிவு விலையில் விநியோகிப்பது, சூரிய சக்தியால் மின்சாரம் பெறுவதற்கான சாதனங்களை மானிய உதவியோடு பொருத்துவது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், மின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை நிறைவேற்ற கோரியும் வரும் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும், இதர இடங்களிலும் மாலை நேர தர்ணா நடைபெறும்'' என்று வரதராஜன் கூறியுள்ளார்.